மார்ச் 21 முதல் ஏப்ரல் 19 வரை

மேற்கண்ட மாத நாட்களில் பிறந்தவர்கள் மேஷ ராசிக்குள் வருவீர்கள். உங்கள் ராசிக்குரிய தாதுப் பொருள் தாமிரம் ஆகும். இந்த மாதம் பணவரவு பற்றிய, அதிர்ஷ்ட தகவல்கள் கிடைக்கும். அல்லது உங்கள் கைபேசியின் தரவுகள், உங்களுக்கு பணம் சம்பாதித்து தரும். இந்த மாதம் கடன் பற்றிய ஒரு நிம்மதி கிடைக்கும். சிலர் வீடு வாங்க கேட்டிருந்த கடன் கிடைக்கப் பெறுவீர்கள். சிலருக்கு கடனை தீர்க்கும் வழிகிடைக்கும். உங்களில் சிலருக்கு சீருடைப்பணி கிடைக்கும் வாய்ப்பு வரும். உங்கள் இளைய சகோதரியின் திருமணம் நடக்கும். வீடு பழுது பார்க்கும் நிலை அல்லது வாகனம், கைபேசி ரிப்பேர் பண்ணும் நிலையுண்டு. இந்த மாதம் உங்கள் வாரிசுக்கும் அவருடைய வாழ்க்கைத் துணைக்கும் செமஃபைட் வரும். சிலர் பங்கு வர்த்தகம் தரும் லாபம் கைக்கு கிடைக்க தாமதம் ஆகும். பயணங்கள் அதிர்ஷ்டம் தரும். உங்கள் வியாபார வணிகத்தில் மறைமுக கொடுக்கல்- வாங்கல் அதிகமிருக்கும். அரசியல்வாதிகளும், அரசு துறை அதிகாரிகளும், ஒருவருக்கொருவர் முறைத்துக்கொள்வர். தாயார் உடல்நிலையில் கவனம் தேவை. திருவண்ணாமலை சென்று வணங்கவும். உங்கள் வீட்டுக்கு அருகிலுள்ள தண்டாயுதபாணி முருகருக்கு விளக்கு ஏற்றவும்.

ஏப்ரல் 20 முதல் மே 20 வரை

Advertisment

மேற்கண்ட மாத நாட்களில் பிறந்தவர்கள் ரிஷப ராசியினர் ஆவர். உங்களின் உலோகம் வெள்ளி ஆகும். இந்த மாதம் நேர்நிலையான வருமானத்திற்கு சான்ஸே இல்லை. மேலும் பேச்சுவாக்கில் கம்பெனி ரகசியத்தை உளறிவிட்டால் என்ன செய்வது என நீங்களே பேச்சை குறைத்துவிடுவீர்கள். உங்கள் அலைபேசி தரவுகள்மூலமும் பணவரவு வரும். வீடு விஷயமாக, உங்கள் தாயும் தந்தையும் சண்டை போடுவார்கள். சிலருக்கு உங்கள் தொழில் நிலையும், உங்கள் வாழ்க்கைத் துணையின் தொழிலும் முட்டிக் கொள்ளும் சூழ்நிலை ஏற்படும். அரசு சார்ந்த வீடுகள் வாங்கும்போது சில எரிச்சல் ஏற்படும். காதல் கைபேசி வழியே எட்டி பார்க்கும். உங்களின் சில வாரிசுகள், செய்தி துறை, டி.வி போன்றவற்றில் கால்பதிப்பர். ஆரோக்கியம் சார்ந்து, இரு சக்கர வாகனம் வாங்குவீர்கள். உங்களில் சிலர், வெளிப்படையாக கூற இயலாத, அரசியல் சார்ந்த நிறுவனங்களில் வேலை கிடைக்கப் பெறுவீர்கள். சிலர் வட்டி சம்பந்த வேலையில் சேர்வீர்கள். உங்கள் வணிகத்தில், இந்த மாதம் எளிதான ஏற்றம் வந்தாலும், அது ஏனோ அரசு அதிகாரிகளை உறுத்தும். உங்கள் தாயாரும், உங்கள் மாமியாரும் செம ஃபைட் பண்ணுவார்கள். காஞ்சி ஏகாம்பரேஸ்வரரை வணங்கவும். கல்யாண கோல முருகருக்கு விளக்கேற்றி வணங்கவும். 

மே 21 முதல் ஜூன் 20 வரை 

மேற்கண்ட மாத தினங்களில் பிறந்தவர்கள் மிதுன ராசிக்குள் வருவர். இவர்களின் உலோகம் பித்தளை ஆகும். இந்த மாதம் பணவரவு வந்துகொண்டே இருக்கும். ஆனாலும் செலவும் அதன் பின்னாடியே வருவதால், எப்போதும் காசு, பண சிந்தனை இருந்து கொண்டேயிருக்கும். இந்த மாதம் உங்களில் சிலர் கல்யாணம் பண்ணிவிட்டு ஓடிவிடுவீர்கள். மனை வாங்க கடன் கிடைக்கும். விவசாய சம்பந்தமான கடனும் கிடைக்கும். இந்த மாதம் உங்கள் இளைய சகோதரனுக்கும் அவன் மனைவிக்கும் சண்டை வரும். உங்கள் வாரிசுகள், தொழில் தொடங்குவர். உங்கள் பெற்றோரின் உடல்நலன் பேணவேண்டும். உங்களில் நிறைய பேர், புது தொழிலில் முதலீடுசெய்து, ஆரம்பித்துவிடும் வாய்ப்புண்டு. வீடு கட்ட, விவசாய கடனுக்கும் உதவிசெய்வர். வாழ்க்கைத் துணையின், தொழில் மேன்மைக்கு கடன் வாங்கிக் கொடுப்பீர்கள். உங்கள் மாமியார், உங்கள் வாரிசின் பொருட்டு உங்களுடன் தங்குவார். உங்களில் பலர் வீடு மாற வேண்டியிருக்கும். உயர்கல்வி கற்போர், அரசு சார்ந்த இன்னலுக்கு ஆளாவர்கள். வெளிநாட்டில் வசிக்கும் வாரிசும் அவரின் வாழ்க்கைத் துணையும், உங்கள் இல்லம் வந்து தங்குவர். சிதம்பரம் நடராஜரை வணங்கவும். திருத்தணி முருகரை விளக்கேற்றி வணங்க நல்லது.

Advertisment

ஜூன் 21 முதல் ஜூலை 20 வரை

மேற்கண்ட மாத நாட்களில் பிறந்தவர்கள் கடக ராசிக்குள் வருவர். உங்களின் உலோகம் ஈயம் ஆகும். இந்த மாதம் முழுக்க, உங்களுக்கு அங்குமிங்கும் அலையவே நேரம் சரியாக போய்விடும். கைபேசி வாங்க நாலு கடை ஏறி இறங்கி அலைவீர்கள். வீடு மாற்றம் சம்பந்தமான அலைச்சல் உண்டு. வீடு பழுதுபார்க்கும் செலவும் அலைச்சலும் வரும். சிலர் வீட்டுக்கு நல்ல வாடகைதாரர் அமைய அலைய வேண்டியிருக்கும். பத்திரிகை செய்தி சேகரிக்கும் பணி, டி.வியில் உள்ளோர் ரொம்ப அலைய வேண்டியிருக்கும். சொந்த அடுக்குமாடி குடியிருப்பில் முதலீடு செய்ய நாலு இடம் அலைவீர்கள். வாழ்க்கைத் துணையின் தொழில் முன்னேற்றம் சம்பந்த அலைச்சல் உண்டு. வாரிசுகளின் தொழில் விஷயமாக அலைச்சல் வரும். உங்களில் சிலர் வேலையில் பதவி உயர்வு, இடமாற்றத்துடன் கிடைப்பதால் அலைய வேண்டிவரும். திருமண விஷயம் குளறுபடி ஆகும். உங்கள் பெற்றோர் இட மாற்றம் பெறுவர். ஆன்மிக பயணம் கிடைக்கும். தொழில் செய்வோர் இடமாற்றம் செய்வர். அல்லது தொழில் செய்யும் இடத்தில் மாற்றங்கள் செய்வர். அரசியல்வாதிகள் இடமாற்றம், துறை மாற்றம், அலுவலக இடமாற்றம் என இதில் ஏதோ ஒரு மாற்றமும் அலைச்சலும் பெறுவர். உங்கள் மாமியார், மாமனாரும் வீடு மாறுவர். உங்கள் குடும்பத்தில் உங்கள் வாழ்க்கைத் துணையுடன் சண்டை உண்டாகும். பணம் சம்பந்தமான ஒரு பெரிய தொல்லை வர வாய்ப்புள்ளது. உங்கள் மூத்த சகோதரி, வேலையில் இடமாற்றம் பெறுவார்.சீர்காழி சென்று வணங்கலாம். திருச்செந்தூர் வழிபாடு நன்மை தரும். 

ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 20 வரை

மேற்கண்ட மாத நாட்களில் பிறந்தவர்கள் சிம்ம ராசிக்குள் அமைவர். இவர்களின் உலோகம் தாமிரம் ஆகும். உங்களுக்கு "வரவு எட்டணா, செலவு பத்தணா' என்கிற கதையில் இந்த மாதம் ஓடிவிடும். உங்கள் பெற்றோர்வகையில், காசு, பணம் கிடைக்க வாய்ப்புள்ளது. உங்கள் கைபேசி தகவல்கள் நன்மை தரும். நல்ல பெண் பணியாளர் கிடைப்பார். லாபமான ஒப்பந்தம் கிடைக்கும். அனேக பெண்கள் இரு சக்கர வாகனம் வாங்குவீர்கள். வீடு விற்கும் எண்ணமுள்ளவர்களுக்கு, இந்த மாதம் நீங்கள் நினைத்த அளவில் விற்பனை ஆகும். உங்கள் இளைய சகோதரிக்கு, லஞ்சம்மூலம் பதவி உயர்வு கிடைக்கும். விவசாயத்தில் பண வரவு கிடைக்கும். அல்லது மனைகள் காசு கொடுக்கும். உங்கள் வாரிசுக்கு திருமணமாகி, மருமகன் அல்லது மருமகள் வருவார். இந்த மாதத்தில் பிறந்தவர்கள் நிறைய செலவுடன், அரசியலில் மிளிர்வர். தம்பதிகளுக்குள், ஆசைகளின் அளவில் சண்டை வரும். சண்டை, சச்சரவுடன் திருமணம் நடக்கும். சில மறுமணங்கள் வெளியூரில் நடக்கும். ஏற்றுமதி தொழில் சார்ந்தோர், நல்ல லாபம் பெறுவர். உங்கள் முதலாளிகள், பண விஷயத்தில் கெடுபிடி காட்டுவர். உங்களில் சிலர் முதலீடுசெய்து, புதுதொழில் அல்லது பழைய தொழிலை விருத்தி செய்வீர்கள். இந்த மாதம் உங்கள் ஆசை, லட்சியம் கனவு நிறைவேற நிறைய செலவும், அலைச்சலும் ஆகும். எனவே இது சம்பந்தமாக உங்களுக்கும், உங்கள் வாழ்க்கைத் துணைக்கும் செமஃபைட் வரும். சூரியனார் கோவில் மற்றும் சுவாமிமலை முருகரை வணங்கலாம். வீட்டில் குறைவாக சண்டை போடுங்கள். அதுவே இந்த மாத பரிகாரமாகும். 

ஆகஸ்ட் 21 முதல் செப்டம்பர் 20 வரை 

மேற்கண்ட மாதத்தின் நாட்களில் பிறந்தவர்கள் கன்னி ராசிக்குள் வருவர். உங்களின் உலோகம் பித்தளை ஆகும். இந்த மாதம் தொட்டதெல்லாம் பொன்னாகும். இவ்வித எளிதான லாபவரவுக்குள், உங்களின் குயுத்தியான மூளையும், குசும்பும், சற்று குறுக்குவழியும் கலந்திருக்கும் என தனியாக சொல்லவேண்டியதில்லை. இதன்காரணமாக, பிறரின் வயிற்றெரிச்சலுக்கு ஆளாவீர்கள். இதையறிந்த உங்கள் பணியாளர்களும், உங்களிடம் வீம்பு காட்டுவர். இந்த மாதம் உங்கள் தொழில்மூலமும் மற்றும் உங்கள் வாழ்க்கைத்துணைமூலமும், நல்ல வருமானம் கிடைக்கும். வீடு மாற்றுவது பற்றி யோசித்து செய்யவும். சில மாணவர்கள், உயர் கல்வியில், தொழில் சார்ந்த துறையில் சேருவர். சில பெண்கள் சொந்தத் தொழில் ஆரம்பித்துவிடுவர். இதற்கு உங்களின் பெற்றோர் ஒத்தாசை செய்வர். சொந்த வீடு பற்றிய சிந்தனை வரும். உங்களின் வாரிசுகளின் வேலையின் பொருட்டு, சில அரசியல்வாதிகளை சந்திக்க நேரிடும். உங்களில் சிலருக்கு காதல் கல்யாணம் நடக்கும். சிலருக்கு வேலை செய்யும் இடத்தில் காதல் துளிர்க்கும். குடும்பத்துடன் ஆன்மிக யாத்திரை செல்வீர்கள். பணிபுரியும் மாதச் சம்பள தொழிலாளர்கள், அரசு அதிகாரிகளுடன் செமஃபைட் பண்ணுவர். அல்லது உங்கள் தாய்மாமனுக்கும் உங்கள் தந்தைக்கும் மிக அதிக சண்டை நடக்கும். சங்கரன் கோவில் சென்று வணங்கவும். வள்ளியூர் முருகருக்கு விளக்கேற்றி வணங்கவும். 

செப்டம்பர் 21 முதல் அக்டோபர் 20 வரை

மேற்கண்ட தினங்களில் பிறந்தவர்கள் துலா ராசிக்குள் வருவர். உங்களின் உலோகம் வெள்ளி ஆகும். இந்த மாதம் உங்கள் கையில் பணம் வந்ததும் தெரியாது. போனதும் தெரியாது. அந்த அளவில் வேகமான செலவுகள் வரும். ஒன்று உங்கள் இளைய சகோதரனின் திருமணம் சார்ந்து செலவு அதிகமாக இருக்கும். அல்லது உங்கள் தந்தை எங்காவது கீழே விழுந்து அடிபட்டு, மருத்துச்செலவு அதிகமாகும். எது எப்படியோ, செலவு அதிகரித்து கடன் வாங்குவது நிச்சயம் நடக்கும். இந்த சூழ்நிலையில் வீட்டில் வாக்குவாதம், கோபம், வெளிநடப்பு இவையெல்லாம் சகஜம்தான். சிலருக்கு வாரிசு பாக்கியம் கிடைக்கும். இந்த மாதம் பிறந்த குழந்தைகளின் தந்தைக்கு லஞ்சம் கொடுத்து வேலை கிடைக்கும். திருமணம் சார்ந்த செலவுகள் அதிகமிருக்கும். அல்லது வெளிநாட்டில் சிலருக்கு திருமணம் நடக்கும். அல்லது சில தம்பதிகளுக்குள் பிரிவினை நடக்கும். உங்கள் தொழில் சார்ந்த, முதலீட்டுச் செலவுண்டு. சிலர் தொழிலை விரிவுபடுத்த செலவுசெய்வர். சிலர் வீண் கௌரவம் பொருட்டு பணத்தை வாரியிறைப்பர். அரசு அதிகாரிகளும், பதவி உயர்வுடன் இடமாற்றம் கிடைத்தாலும், கொடுக்க வேண்டியதைக் கொடுத்து, பதவி உயர்வை மட்டும் வைத்துக்கொண்டு, இடமாற்றத்தை பக்கத்து டேபிளுக்கு தள்ளிவிட்டு விடுவர். இந்த மாதம் வாரிசுகளின் திருமணத்தை யோசிக்கவும். அடுத்த மாதம் முடிவெடுத்துக்கொள்ளலாம். ஏற்கெனவே திருமணமான வாரிசும், அவரது வாழ்க்கைத் துணையும் செம சண்டை போட்டு, உங்களுக்கு பிரஷரை ஏற்றுவார்கள். மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரரை வணங்கவும். முருகருக்கு, நிறைய காணிக்கை செலுத்துங்கள். இதனால் வீண் செலவு மட்டுப்படும். 

அக்டோபர் 21 முதல் நவம்பர் 20 வரை

மேற்கண்ட மாத நாட்களில் பிறந்தவர்கள் விருச்சிக ராசிக்குள் வருவர். உங்களின் உலோகம் செம்பு ஆகும். இந்த மாதம் வேலை கிடைக்கும். சீருடை பணியாக அமையும். வேலை பார்ப்பவர்கள் பதவி உயர்வு கிடைக்கப் பெறுவார்கள். வழக்கில் வெற்றியுண்டு. இதெல்லாம் கிடைத்தவுடன், உடனே பணமும் மானாவாரியாக கொட்டும் என எதிர்பார்க்க வேண்டாம். இந்த மாதம் பணவரவு "வரும் ஆனா வராது' என்ற அளவில்தான் அமையும். பணம் வராவிட்டாலும் பரவாயில்லை. செலவு மட்டும் எக்கச்சக்கமாக இருக்கும். உங்கள் வாக்கில் தடுமாற்றம் தெரியும். தாயார், தந்தை உடல்நலனில் கவனம் தேவை. மனை, விவசாயம் சம்பந்த கடன் கிடைக்கும். உங்களின் குதர்க்கமான சொற்கள், குடும்பத்தை கும்மி அடிக்க வைத்துவிடும். உங்கள் காதல் விஷயம் கம்பி எண்ண வைக்கும் அல்லது எங்காவது ஓட வைத்துவிடும். இந்த மாதம் காதல் விஷயத்தை யோசிக்கக்கூடாது. அடி நிச்சயம். உங்கள் தொழில் இடத்தில் அரசாங்கம் ரொம்ப தொந்தரவு தரும். அரசு அதிகாரிகளும் அவரவர் நிலைக்கேற்ப இம்சை பெறுவர். உங்கள் தாயாரும், உங்கள் மாமியாரும் நேருக்கு நேர் நின்று மெசஃபைட் கொடுப்பார்கள். காளஹஸ்திநாதரை வணங்கவும். முருகர் கோவிலுக்கு உழவார பணி செய்யவும். 

நவம்பர் 21 முதல் டிசம்பர் 20 வரை 

மேற்கண்ட மாத தினங்களில் பிறந்த நபர்கள் தனுசு ராசிக்குள் வருவர். உங்களின் உலோகம் தங்கம் ஆகும். இந்த மாதம் உங்களின் திருமணம் பேசிமுடிக்கும் நேரத்தில் ஒரு பெரிய சண்டை வந்துவிடும். இதனால் திருமண பேச்சில் தடை ஏற்படும். இந்த சண்டைக்கு அனேகமாக உங்கள் மூத்த சகோதரி காரணமாவார். வெளிநாட்டு பணம் உங்கள் கைகளில் புழங்கும் வாய்ப்புண்டு. உங்கள் பணியாளர்கள், வெகு கோபம் கொள்வர். அரசு சார்ந்த ஒப்பந்தங்களில் சில சிக்கல்கள் தோன்றும். உங்களின் தொழிலில், உங்கள் வாழ்க்கைத் துணையின் தொழிலில், உங்கள் வாழ்க்கைத் துணையின் தொழிலும் சேர்ந்துவிடும். இது லாப நோக்கு மற்றும் கடன் பிரச்சினையால் உண்டாகும். உங்கள் வாரிசின் தொழில் செய்யும் இடம் சரிப்பட்டு வராது என கூறப்படுவதால், இடமாற்றம் செய்வார். திருமணமான தம்பதியருக்குள், கௌரவப் பிரச்சினையால் சண்டை நடக்கும். உங்கள் இளைய சகோதரனுக்கும், உங்கள் தந்தைக்குமிடையே, ரொம்ப சண்டை வரும். வேறுசில இடங்களில், தொழில் முதலாளிகளும், தொழிலாளர்களும் மிக சண்டையிட்டுக் கொள்வர். உங்கள் தொழில் பங்குதாரர் சில மறைமுக இடையூறுகளை உண்டாக்குவார்; கவனம் தேவை. இந்த இன்னல்கள், சிலபல அவமானங்களையும், குழப்பமான கணக்குகளையும் கொடுக்கும். உங்கள் மாமியாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. திருச்செங்கோடு சென்று வணங்கலாம். வைத்தீஸ்வரன் முருகரை வணங்கி தீபமேற்றவும், 

டிசம்பர் 21 முதல் ஜனவரி 20 வரை

மேற்கண்ட மாத நாட்களில் பிறந்தவர்கள் மகர ராசிக்குள் வருவர். உங்களுக்கான உலோகம் இரும்பு ஆகும். வெளிநாட்டு வேலையை, வீட்டில் இருந்தே செய்யலாம். சிறுதூர, வெகுதூரப் பயணம் என்று அலைச்சல் இருந்துகொண்டே இருக்கும். கால் பாதவலி அல்லது தோள்பட்டை வலி வந்துவந்து போகும். வேலை செய்யும் இடத்தில் நல்ல பணியாளர் அல்லது குழந்தையை பார்த்துக்கொள்ள ஒரு பெண் அமைவார். வேலையில் சேர ஒப்பந்த கையெழுத்து போடுவீர்கள். தாயார்வகையில் ஒரு லாபமான அதிர்ஷ்டம் கிடைக்கும். அது விஷயமாக, உங்கள் மூத்த சகோதரனுடன் மனப்பிணக்கு ஏற்படும். உங்கள் வாரிசுகள் வேலை கிடைத்து வேறிடம் செல்வர். உங்களில் சிலர் பங்கு வர்த்தகம் பொருட்டு கடன் வாங்கி முதலீடு செய்வீர்கள். கடன் கொடுத்தவர்களை தொழில் பங்குதாராகவோ அல்லது வாழ்க்கைத் துணையாகவோ அமைத்துக்கொள்ளும் வாய்ப்புண்டு. அரசாங்க அதிகாரிகளால் பணவிஷயமாக, வெகு அல்லல்பட நேரிடும். அல்லது உங்களின் சில ஒழுக்கங்கெட்ட செயல்களின் பொருட்டு, அதிகாரிகளிடம் பதில் கூறமுடியாமல் தவிப்பீர்கள். உங்களில் சிலர், சிறைவாசம் செய்யவும் வாய்ப்பு உள்ளது. இதனை சூரியன்+கேது இணைந்து கொடுப்பர். இந்த மாதம் உங்கள் வாக்கு, உங்களுக்கு செம அடி வாங்கித் தரும். 
அந்த அடி உங்கள் தந்தையின்மூலமா அல்லது அரசாங்கத்தின்மூலமா அல்லது இரண்டு இடத்திலும் அடி விழுமா என்பது மில்லியன் டாலர் கேள்வி. இந்த மாதம் வாயை மூடிக்கொண்டு இருக்க இயலாது என்பதே பதில் ஆகும். சிதம்பரம் நடராஜரை வணங்கலாம். வயலூர் முருகரை வணங்கவும். 

ஜனவரி 21 முதல் பிப்ரவரி 19 வரை

மேற்கண்ட மாத நாட்களில் பிறந்தவர்கள் கும்ப ராசிக்குள் வருவர். உங்களின் உலோகம் இரும்பு ஆகும். இந்த மாதம் ஏனோ உங்களுக்கு பணம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். இந்த மாதம் தொழில் செய்யும் இடத்தில் தொழிலாளர்களிடம் லிமிட்டோடு பழகவும். சிலசமயம், ஒரே அப்பாக அப்பிவிட வாய்ப்பு கண்டிப்பாக உண்டு. உங்கள் வாரிசுகள் சிலருக்கு வேலை கிடைக்கும். உங்களில் சிலர் அஜீர்ண கோளாறால் அவதிப்படுவீர்கள். இந்த மாதம், உங்களின் அதீத பணத்தாசை, உங்கள் வாழ்க்கைத் துணைவரை வெகுண்டு எழ வைத்துவிடும். சிலசமயம் இந்த விஷயத்தினால், வீட்டைவிட்டு வெளியேறி, ஆசுவாசப்படுத்திக் கொள்ளும் சூழலும் உண்டு. எதிர்பாராத வருமானம் உண்டு. வாரிசுகளுக்கு திருமணம் நடக்கும். பேரன்- பேத்திகள் வரும் வாய்ப்புண்டு. தொழில் செய்யும் இடத்தில், தீ விபத்து ஏற்படாமல் கவனமாக பார்த்துக்கொள்ளவும். இந்த மாதம் வாழ்க்கைத்துணையுடன் செமஃபைட் இருக்கும். கும்பேஸ்வரரை வணங்கலாம். மருதமலை முருகரை வணங்கவும். 

பிப்ரவரி 20 முதல் மார்ச் 20 வரை 

மேற்கண்ட தினங்களில் பிறந்தவர்கள் மீன ராசிக்குள் வருவர். உங்களின் உலோகம் தங்கம் ஆகும். இந்த மாதம், உங்கள் வாழ்க்கைத்துணையைச் சார்ந்து நிறைய விஷயங்கள் நடக்கும். அவருடைய தொழிலில், மேன்மைக்காக நிறைய உழைக்க விரும்புவீர்கள். அதனால், தொழில் நடக்கும் இடத்தை மேன்மைப்படுத்துவது, அங்கு வேலை பார்க் கும் ஊழியர்களை சீர்செய்வது விளம் பரத்துக்கு உதவுவது என இவைபோன்ற விஷயங்களில் தோள் கொடுத்து உதவுவர். இதனால் வாழ்க்கைத் துணைமூலம் வருமான அதிர்ஷ்டமும் உங்களுக்கு கிடைக்கும். இந்த மாதம் வீடு விற்கும் யோசனை அல்லது வீடு மாற்றும் யோசனை இருந்தால், சற்று நிதானித்து செய்யவும். காதல் திருமண வாய்ப்பு உள்ளது. உங்களில் சிலருக்கு அரசு வேலை கிடைக்கும். அது ரொம்ப தூரத்தில், கொஞ்சமும் பிடிக்காத இடத்தில் அமையும். உஷ்ண நோய் வரக்கூடும். தாயார் நலன் கவனிக்கப்பட வேண்டும். சினிமா கலைஞர்களில் சிலர், விருப்பத் திருமணம் செய்துகொள்வர். சிலர் தங்கள் தொழில் சம்பந்தமான விபரீதமான குற்றச்சாட்டுக்கு ஆளாவார்கள். பங்கு வர்த்தகம், வருமானம் கொடுப்பதுபோல் இருந்து காலை வாரிவிடும். வாரிசுகளின் நண்பர்கள்மேல் சற்று கவனம் இருக்கட்டும். அரசியல்வாதிகள் நிறைய பயணம் செய்ய வேண்டியிருக்கும். சிலர் வெளிநாடு சென்றுவருவர். அரசியல்வாதிகளும், அரசு அதிகாரிகளும் செமஃபைட் பண்ணுவர். இந்த சண்டையில் சில அரசியல்வாதிகளும், அரசு அதிகாரிகளும், இடமாற்றம் வேண்டி பெறுவர். மாணவர்கள் பயணங்களில் கவனமாக இருங்கள். கடற்கரை அருகிலுள்ள சிவனையும், முருகரையும் வணங்குங்கள்.